Archive for the ‘தேர்வு’ Category

உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யாமல் முனைவர் / பிஎச்.டி பட்டம் பெற்றது எப்படி?

ஜூலை 6, 2023

உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யாமல் முனைவர் / பிஎச்.டி பட்டம் பெற்றது எப்படி?

2023 ஜூலைஉதவி பேராசிரியர் முருகேசன் தொடுத்த வழக்கு: உரிய கல்வி தகுதி இல்லாதவருக்கு முனைவர் பட்டம் வழங்கியதாக எழுந்த புகார் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலையில், தண்டபாணி என்பவர், ‘திருவாசக பக்தி கோட்பாடு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்ந்தார். இவருக்கு, உலகநாத நாராயணசாமி அரசு கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முருகேசன் என்பவர் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தண்டபாணி முனைவர் பட்டம் பெற்றார். அவர், உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால், அவரது முனைவர் பட்டத்தை திரும்ப பெற வேண்டும் என, சென்னை பல்கலைக்கு, உதவி பேராசிரியர் முருகேசன் கடிதம் எழுதினார். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

04-07-2023 நான்கு வாரங்களில் சென்னை பல்கலை அறிக்கை தாக்க நீதிமன்றம் உத்தரவு: வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உதவி பேராசிரியர் முருகேசன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[1]: “சென்னை பல்கலை, 164 ஆண்டுகள் பழமையானது. முனைவர் படிப்புக்கு விண்ணப்பித்தவரின் தகுதியை சரிபார்க்க தவறியது, பல்கலையின் அக்கறையின்மையை காட்டுகிறது. தண்டபாணியின் தகுதியை ஆய்வு செய்யாமல், முனைவர் படிப்புக்கு சேர்த்தது, அதிர்ச்சி அளிக்கிறது. முனைவர் பட்டம் என்பது உச்சபட்ச கல்வி தகுதியாக கருதப்படும் நிலையில், அதை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மெத்தனப்போக்குடன் இருக்கக்கூடாது. கடின உழைப்பால் பட்டம் பெறக்கூடிய முனைவர்களை சந்தேகிக்கும் வகையில், பல்கலைகள் செயல்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. எனவே, மனுதாரர் முருகேசன் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் விசாரித்து, நான்கு வாரங்களில் சென்னை பல்கலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது[2].

2021ல் முன்னர் ஆண்டை விட இரு மடங்கு பதிவு ஆனது: பல்கலைக்கழகங்களில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கு முனைவர் படிப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ள நிலையிலும், அதிக வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுவதால், சென்னை பல்கலைக்கழம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் முனைவர் படிப்பிற்கு பதிவு செய்து உள்ளவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது[3]. 2019ஆம் ஆண்டில் 406 என்ற அளவில் இருந்த பதிவு, 2021ஆம் ஆண்டில் 859 ஆக அதிகரித்து உள்ளது[4]. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ், 5 ஆயிரம் அறிஞர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

2022- இதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை: முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற விதிமுறை பல ஆண்டுகளாக அமலில் உள்ளது.ஆனால் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்விதழ்களில் 75% மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்ற தகவலை ஆய்வின் மூலம் யுஜிசி கண்டறிந்துள்ளது[5]. மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி-களில் முனைவர் பட்டம் பயிலும் 2,573 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ஐஐடியில் முனைவர் பட்டம் பயிலும் சில மாணவர்கள் தரமான ஆய்விதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரிப்பதும் யுஜிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் வாயிலாக, பின்நாட்களில் காப்புரிமை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பான்மையான ஆராய்ச்சி மாணவர்கள் தரமான ஆய்வு இதழ்களில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்று தெரியவந்துள்ளதால் இந்த நடைமுறையை மாற்ற பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்தது. அதன்படி, மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் சமர்ப்பிப்பது கட்டாயம் இல்லை என்று நாடு முழுவதும் விரைவில் புதிய விதிமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது[6].

காசு கொடுத்து ஆய்வுகட்டுரை பதிப்பித்துக் கொண்டால் கிரிடெட் கிடைக்குமா?: அதாவது, ஆய்வுகட்டுரைகள் பதிப்பிக்க, ISBN, UGC care List என்றெல்லாம் எண்கள் வாங்கி வைத்துக் கொண்டு, ஒரு பேப்பருக்கு, ரூ.1000/- / 2000/- என்று வாங்கிக் கொண்டு, “International Journal………” என்றெல்லாம் பெயரை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்கிலீஷ் / ஆங்கிலம் தெரியாமல் கூட, காசு கொடுத்து, பேப்பர் எழுத வைத்து, பதிப்பித்துக் கொண்டு கிரிடெட் வாங்கிக் கொள்கிறார்கள். இத்தகைய ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இம்முறை கொண்டு வரப் படுகிறது. இதனால், போலி “International Journal………”-களுக்கு வழியில்லாமல் போய் விடும். உண்மையான ஆராய்ச்சி தன்மை, கட்டுரை எழுதும் நபர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆராய்ச்சியில் போலித் தன்மை வரும்பொழுது, எல்லா விதமான போலிகளும் வருகின்றன. காசு கொடுத்தால் வாங்கி விடலாம் என்ற நிலைமையும் வருகிறது.

2016-17 பிஎச்டி நிபுணர் குழு / ரிவீய்வு கமிட்டி/ சரிபார்த்தல் குழு: சென்னை பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் மிக பழமை வாய்ந்ததாகும். இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பி.எச்.டி. டாக்டர் பட்டத்துக்கு ஆய்வு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் பலர் ஆய்வு முடித்து வெளியேறுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்த ஆய்வு முறையாக நடக்கவில்லை. தரம் குறைந்த நிலையில் அவை உள்ளன என்று இப்போது தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பி.எச்.டி. ஆராய்ச்சிகள் எப்படி நடைபெற வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றை சென்னை பல்கலைக்கழகம் முறையாக பின்பற்றவில்லை. மாணவர்கள் சமர்ப்பிக்கும் பி.எச்.டி. ஆராய்ச்சி கட்டுரைகளை (திசிஸ்) வெளி பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்வது வழக்கம். அவ்வாறு 2016-17-ம் கல்வி ஆண்டில் பி.எச்.டி. முடித்து சமர்ப்பித்த 600 ஆய்வு கட்டுரைகளை இந்த நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.

முறைப்படி ஆராய்ச்சி நடக்கவில்லை, அறிக்கை சமர்ப்பிக்கப் படவில்லை: இந்த குழுவில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இதுவரை 100 கட்டுரைகளை ஆய்வு செய்து முடித்துள்ளனர். அவற்றில் பல கட்டுரைகள் முறையாக ஆய்வு செய்து தயாரிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ஆய்வு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. படிப்பவர்களை ஆய்வு செய்வதற்காக டாக்டரல் கமிட்டி என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். அதில் 3 பேராசிரியர்களும், ஒரு துறை சார்ந்த நிபுணரும் இருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலவரையரையில் அந்த மாணவர்களின் தரத்தை ஆய்வு செய்வார்கள். பி.எச்.டி. ரெகுலர் படிப்பில் இருப்பவர்களை 6 மாதத்துக்கு ஒரு தடவையும், பகுதி நேர படிப்பில் இருப்பவர்களை ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வை முடித்து அவர்கள் அறிக்கையும் தர வேண்டும்.

நிபுணர் குழு பல்வேறு குறைபாடுகள் இருப்பதை கண்டுபிடித்தது: ஆனால், சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டரல் கமிட்டி முறையான ஆய்வுகளை செய்யவில்லை. பல மாணவர்கள் டாக்டரல் கமிட்டி ஆய்வு செய்யாமலேயே தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஆராய்ச்சி கட்டுரைகளை 3 வெளி பேராசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஒருவர் வெளி பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும், மற்றொருவர் வெளி மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும், இன்னொருவர் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய சொல்வார்கள். அந்த விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை. இவ்வாறு பல்வேறு குறைபாடுகள் இருப்பதை நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது.

மேற்பார்வை சரியாக நடக்கவில்லை: சென்னை பல்கலைக் கழகத்தில் 2016 ஜனவரி முதல் 2017 வரை மே வரை துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இதனாலும் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக துணை வேந்தர் துரைசாமியிடம் கேட்டபோது, பி.எச்.டி. படிப்பவர்கள் குறைந்தது 2 ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும். தேசிய மாநாடுகளில் 4 ஆண்டுக்குள் பங்கேற்க வேண்டும். 5-வது ஆண்டில் டீன் அல்லது மூத்த பேராசிரியர்கள் டாக்டரல் கமிட்டியில் இடம்பெற்று இருப்பார்கள். மாணவர்களின் ஆய்வு செயல்பாடு சரியில்லை என்றால் அவர்களை படிப்பை விட்டு செல்லும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறினார். நிபுணர் குழு ஆய்வு குறித்து மூத்த பேராசிரியர் ஒருவர் கூறும் போது[7], “300 பக்கங்கள் கொண்ட ஒரு பி.எச்.டி. ஆய்வு கட்டுரையை முறையாக ஆய்வு செய்வதாக இருந்தால் 3 மாதங்கள் வரை ஆகும். ஆனால், நிபுணர் குழுவினர் சில கட்டுரைகளை ஒரு வாரத்தில் ஆய்வு செய்து முடிவை சொல்லி இருக்கிறார்கள். சில கட்டுரைகளை ஒரு நாளிலேயே ஆய்வு செய்து முடிவை கூறி இருக்கிறார்கள். இது, கேலிக்கூத்தாக உள்ளது,” என்று கூறினார்[8].

© வேதபிரகாஷ்

05-07-2023


[1] தினமலர், உரிய கல்வி தகுதியின்றி முனைவர் பட்டம் அறிக்கை தர சென்னை பல்கலைக்கு உத்தரவு, Added : ஜூலை 05, 2023  02:12

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3366772

[3] டைம்ஸ்.ஆப்.இந்தியா, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் (PhD) படிப்பிற்கான பதிவு இரண்டு ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு, Feb 8, 2022, 18:12 IST

[4] https://timesofindia.indiatimes.com/tamil/phd-registrations-in-madras-university-double-in-2-years/articleshow/89432150.cms

[5] தினத்தந்தி, பி.எச்.டி. மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க கட்டாயம் இல்லைபல்கலை. மானியக் குழு, தினத்தந்தி, Sep 28, 1:59 pm (Updated: Sep 28, 4:16 pm)

[6] https://www.dailythanthi.com/News/State/phd-students-are-not-required-to-publish-research-papers-in-research-journals-university-grant-committee-802885

[7] மாலைமலர், சென்னை பல்கலைக்கழகத்தில் தரமில்லாத பி.எச்.டி. – ஆய்வு நிபுணர்குழு சோதனையில் கண்டுபிடிப்பு, Byமாலை மலர்25 பிப்ரவரி 2018 4:56 PM (Updated: 25 பிப்ரவரி 2018 4:56 PM).

[8] https://www.maalaimalar.com/news/district/2018/02/25165654/1147704/Substandard-PHD-study-at-Madras-University.vpf