பச்சமுத்துவிலிருந்து பாரிவேந்தர் வரை: மாற்றம்!

பச்சமுத்துவிலிருந்து பாரிவேந்தன் வரை: மாற்றம்!

“”இளைஞர்கள் மூலம் இந்தியாவில் ஜனநாயகத்தையும், மறுமலர்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என்பதே இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐ.ஜெ.கே.,) நோக்கம்,” என்று அக்கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர் தெரிவித்தார். கடந்த ஏப்., 28ம் தேதி துவக்கப்பட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் முதல் தேசிய மாநாடு வரும் 29ம் தேதி திருச்சியில் நடக்கிறது. மாநாட்டுக்கான பந்தல் மற்றும் அலங்கார வளைவு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எம்மதமும் சம்மதம் என்பதை காட்டும் வகையில் மாநாட்டு பந்தலுக்கு முன், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களின் கோவில்கள் வடிவிலான அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாநாட்டு பணிகளை பார்வையிட வந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர், நிருபர்களிடம் கூறியதாவது:  இந்திய ஜனநாயகக் கட்சியின் முதல் தேசிய மாநாடு, திருச்சி பஞ்சப்பூரில் வரும் 29ம் தேதி நடக்கிறது. இதில், இரண்டு லட்சம் பெண்கள் உட்பட 10 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர். 20 ஆயிரம் வாகனங்களில் கட்சியினர் மாநாட்டுக்கு வரவுள்ளனர். காலையில் கொடியேற்றம், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கும் மாநாட்டில் மாலை 3 மணிக்கு மேல் கட்சியினரும், 7 மணிக்கு நிறுவனரான நானும் பேசுகிறோம்.

கட்சியின் முதல் தேசிய மாநாட்டில் தமிழகத்தில் மட்டுமின்றி உத்தர பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 50 ஆயிரம் இளைஞர்கள், 500 பஸ்கள் மற்றும் ஐந்து ரயில்களில் வந்து பங்கேற்கின்றனர். அவர்களில் பலர் வெளிமாநிலங்களிலிருந்து புறப்பட்டும் விட்டனர். ஐ.ஜெ.கே.,வில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால், முதலில் பாரி நற்பணி மன்றத்தில் உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கடந்த ஓராண்டுக்கு முன் துவக்கப்பட்ட பாரி நற்பணி மன்றத்தில், தற்போது மூன்று லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

அந்த அமைப்பின் மூலம் கல்வி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏராளமான உதவிகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டு வருகின்றன. அந்த அமைப்பே அப்படியே கட்சியாக மாற்றப்படுகிறது. பாரி நற்பணி மன்றம் மூலம் சமூக சேவைக்கு தகுதியானவர் என்றால் மட்டுமே கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். பாரி நற்பணி மன்றத்தின் சேவையை தமிழகத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று தான் தேசியக் கட்சியாகத் துவக்கியுள்ளோம்.

நாட்டில் ஜனநாயகம் இல்லை எனக் கருதுகிறோம். இளைஞர்கள் தங்கு தடையின்றி அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தான், எதிர்கால இந்தியா சிறப்பாக இருக்கும். இளைஞர்கள் மூலம் இந்தியாவில் ஜனநாயகத்தையும், மறுமலர்ச்சியையும் கொண்டு வரும் நோக்கத்தின் அடிப்படையில் தான் ஐ.ஜெ.கே., தேசிய கட்சியாக துவக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சம உரிமை, அவர்களுக்கு எல்லா துறைகளிலும் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதிலும் ஐ.ஜெ.கே., உறுதியாக உள்ளது. அனைவருக்கும் உயர்தர கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மேம்பட்ட மருத்துவ வசதி, லஞ்சம் களைதல், கிராமப்புற தொழில் வளர்ச்சி உள்ளிட்ட 12 கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தான் ஐ.ஜெ.கே., துவக்கப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கான நிதி நான்கு கோடி ரூபாய் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. மாற்றத்தை விரும்புவதால் தான் இவ்வளவு நிதியை பொதுமக்கள் அளித்துள்ளனர். இந்திய ஜனநாயகக் கட்சிக்கு வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். வரும் சட்டசபைத் தேர்தலிலும், அடுத்து வரும் எல்லா தேர்தல்களிலும் ஐ.ஜெ.கே., போட்டியிடும். எங்களுக்கு தமிழகத்தில் 80 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது. எங்களின் கட்சிக்கு திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆதரவு அதிகம் உள்ளது.

எங்களுடன் ஒத்துப்போகும், மதிக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்; இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம். கட்சியின் சின்னம் தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். மாநாட்டை மக்கள் மத்தியில் தெரிவிக்கும் வகையில் நாளை (28ம் தேதி) ஐந்தாயிரம் டூவீலர்கள் பங்கேற்கும் பேரணி, திருச்சி உழவர் சந்தையிலிருந்து மாநாடு பந்தல் வரை நடக்கிறது. இவ்வாறு பாரி கூறினார்.

கட்சியின் மாநில தலைவர் கோவை தம்பி, பொதுச் செயலர் ஜெயசீலன், அமைப்புச் செயலர் வெங்கடேசன், மகளிரணி செயலர் முன்னாள் எம்.எல்.ஏ., லோகாம்பாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Pachamuthu-IJK

Pachamuthu-IJK

டாஸ்மாக் கடைகளில் பதனீர், கள் மட்டுமே விற்க வேண்டும்: இந்திய ஜனநாயக கட்சி தீர்மானம்: “வெளிநாட்டு மதுபான உற்பத்தியையும், விற்பதையும் நிறுத்தி விட்டு, உடலுக்கு நலந்தரக்கூடிய, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பதனீர் மற்றும் கள் இறக்குதலை அனுமதிக்க வேண்டும். அரசு கடைகளில் பதனீர் மற்றும் கள் மட்டுமே விற்க வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள், திருச்சியில் நேற்று நடந்த இந்திய ஜனநாயக கட்சியின் முதல் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
திருச்சி அருகே பஞ்சப்பூரில், நேற்று இந்திய ஜனநாயக கட்சியின் முதல் தேசிய மாநாடு நடந்தது. மாநாட்டை அக்கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர், கொடியேற்றி துவக்கி வைத்தார். மாநாட்டில், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் மாணவ, மாணவியர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:இந்திய நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, அவை இணைக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக, தென்னக நதிகளை இணைக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க, அரசோடு தனியாரையும் அதிகளவில் ஊக்குவித்து தொழில், விவசாயம் பெருக வழி வகை செய்ய வேண்டும்.
தலைசிறந்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக அரசின் பள்ளி, கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இந்தியாவில் 80 சதவீதம் பேர் விவசாயத்தில் உள்ளதால், நாட்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இணையாக விவசாய கல்லூரிகளை நிறுவி, அதில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும், வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு படிக்கும் மாணவர்களை கிராம ஊராட்சிகளில் பணியமர்த்தி, அப்பகுதியின் விவசாயத்துக்கு பொறுப்பேற்க வழி வகை செய்ய வேண்டும்.
விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு தகுந்த விலை நிர்ணயித்து, பயிர் காப்பீட்டை அரசே ஏற்க வேண்டும். விவசாயத்தில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட இயந்திரமயமாக்கம், விஞ்ஞான முறை ஆகியவற்றை விவசாயத்தில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயம் லாபகரமான தொழில் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக 2,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பெரும்பாலான நாடுகள் சுற்றுலாத் துறை மூலம் பெரும் சதவீதம் வருவாயை ஈட்டுவது போல், நம் நாட்டிலும் தனியாரோடு இணைந்து சுற்றுலாத் துறையை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற செய்ய வேண்டும்.
ஏழை, எளிய மக்கள் நிரந்தரமாக வறுமையிலிருந்து விடுதலை பெற, சுயமாக சிந்தித்து, அவர்கள் வாழும் பகுதியிலேயே வளமாக வாழ சிறு தொழில் செய்கின்ற வகையில், ஆலோசகர்களுடன் கூடிய வழிகாட்டு மையங்களை அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும். இதனால், மக்களிடம் தன்னம்பிக்கை வளரும்; தேர்தல் நேரங்களில் ஓட்டுக்கு பணம் பெறும் மனப்பான்மை மாறும் என வலியுறுத்தப்படுகிறது.அடிப்படை கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆரம்ப கல்வி சட்ட விதிமுறைகள், ஒழுக்கம், தூய்மை, தேசப்பற்று, காலம் தவறாமை ஆகியவற்றை கற்றுத் தருபவைகளாகவும், சுய சிந்தனையை ஊக்குவிப்பதாகவும் இருக்க வேண்டும்.
அரசு தனது வருவாயை தனியார் செய்ய முடியாத சாலை வசதி, மின்சாரம், உயர்கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, நீர்நிலை பாதுகாப்பு, நதிநீர் போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே செலவிட வேண்டும். நலத்திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்களை தவிர்த்து, ஏழை எளிய மக்களின் சுய மரியாதை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வெளிநாட்டு மதுபான உற்பத்தியையும், விற்பதையும் நிறுத்தி விட்டு, உடலுக்கு நலந்தரக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பதனீர் மற்றும் கள் இறக்குதலை அனுமதிக்க வேண்டும். அரசு கடைகளில் பதனீர் மற்றும் கள் மட்டுமே விற்க வேண்டும்.
காலங்காலமாய் ஒடுக்கப்பட்ட எஸ்.சி.,க்களின் நலவாழ்வுக்கு, இந்திய ஜனநாயக கட்சி முழு மூச்சாகப் பாடுபடும். அதே நேரம், மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ள பி.சி.ஆர்., சட்டத்தில் வழக்கு பதிவு செய்யும் முன், முழு விசாரணை மேற்கொண்ட பின்னரே வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.இலங்கையில் வாழும் பூர்வகுடிகளான தமிழர்களை அந்நாட்டு அரசு கொன்று குவித்ததை, மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. போர் முடிந்து ஓராண்டாகியும், முள்கம்பி வேலிகளுக்கு நடுவே அகதிகளாய் அடைபட்டு கிடக்கும் தமிழர்களை, அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தவும், அவர்கள் சுய நிர்ணயம், சம உரிமை பெற்று வாழவும் விரைந்து வழி வகை செய்ய வேண்டுமாய் இந்திய ஜனநாயக கட்சி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சி உருவாக பாடுபட்ட முத்துக்குமாரின்குழந்தைகள் படிப்பு செலவை ஏற்கிறேன்:””இந்திய ஜனநாயக கட்சியின் முதல் தியாகியான முத்துக்குமாரின் இரண்டு குழந்தைகளின் கல்லூரி வரையிலான படிப்புச் செலவு முழுவதையும் கட்சியே ஏற்றுக்கொள்கிறது,” என்று அக்கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர் அறிவித்துள்ளார்.இந்திய ஜனநாயக கட்சியின் முதல் தேசிய மாநாடு நேற்று திருச்சி அடுத்துள்ள பஞ்சப்பூரில் நடந்தது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாநாட்டை, கட்சி நிறுவனர் பாரி வேந்தர் துவக்கி வைத்தார்.மாநாட்டில் கட்சித் தலைவர் கோவை தம்பி, பொருளாளர் ராஜன், பொதுச்செயலர் ஜெயசீலன், மகளிரணி நிர்வாகிகள் லீமா ரோஸ் மார்ட்டின், லோகாம்பாள், நந்தினி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டை துவக்கி வைத்த பின் நிறுவனர் பாரி வேந்தர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:இந்திய ஜனநாயக கட்சியின் முதல் தேசிய மாநாட்டுப் பந்தலுக்கு, தியாகி முத்துக்குமார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. துறையூரைச் சேர்ந்த முத்துக்குமார் 32 வயது இளைஞர். அவருடைய மனைவி இன்ஜினியரிங் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.கட்சியின் மாநாட்டுக்கு மக்களை பெருமளவு திரட்ட வேண்டும் என்பதற்காக இளைஞர் முத்துக்குமார், ஊர், ஊராக பல நாட்கள் இரவு, பகல் பாராமல் சென்று பணியாற்றினார். அதன் விளைவாக, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்துக்குமாருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி இறந்து விட்டார். இதன் மூலம் கட்சியின் முதல் தியாகியாக முத்துக்குமார் ஆகியுள்ளார்.
அவரது தியாகத்தைப் போற்றும் வகையிலேயே மாநாட்டுப் பந்தலுக்கு தியாகி முத்துக்குமார் அரங்கம் என்று அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் படித்து வரும் அவருடைய இரண்டு குழந்தைகள் கல்லூரிப் படிப்பு முடிக்கும் வரை, செலவுகள் அனைத்தையும் இந்திய ஜனநாயக கட்சி ஏற்கிறது. அவருடைய குடும்பத்துக்கும் ஐ.ஜெ.கே., என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.இவ்வாறு பாரி வேந்தர் கூறினார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

4 பதில்கள் to “பச்சமுத்துவிலிருந்து பாரிவேந்தர் வரை: மாற்றம்!”

 1. M. Nachiappan Says:

  இவரது காலேஜிகளில் சேரவே லட்சங்கள்தாம் கொடுக்க வேண்டியுள்ளது, பிறகு, இவர் எப்படி தூய்மை……………………என்றெல்லாம் பேசுகிறார் என்று தெரியவில்லை.

 2. எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில் வருமானதுதுறை ரெய்டு; கணக்கில் வராத பணம் பறிமுதல்! | Academic Degradation and Corruption Says:

  […] [12] https://academicdegradation.wordpress.com/2010/05/30/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E… […]

 3. தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்க Says:

  […] [2]https://academicdegradation.wordpress.com/2010/05/30/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0… […]

 4. தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்க Says:

  […] [1]https://academicdegradation.wordpress.com/2010/05/30/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: